உள்ளடக்கத்துக்குச் செல்

உலகமயமாதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொலைத்தொடர்பு, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், அரசியல், பண்பாடு,


ஆகிய துறைகளின் முன்னேற்றங்களினால் உந்தப்பட்டு உலக சமூகங்களுக்கிடையேயான அதிகரிக்கும் தொடர்பையும் அதனால் ஏற்படுத்தப்பட்டுவரும் ஒருவரில் ஒருவர் தங்கிவாழ் நிலையையும் உலகமயமாதல் எனலாம். உலகமய சூழலில் ஒரு சமூகத்தின் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு நிலைமைகளும் நிகழ்வுகளும் மற்றைய சமூகங்களில் கூடிய விகித தாக்கத்தை ஏதுவாக்குகின்றது. உலகமயமாதல் வரலாற்றில் ஒரு தொடர் நிகழ்வுதான், ஆனால் இன்றைய சூழல் உலகமயமாதலை கோடிட்டு காட்டுவதாக அமைகின்றது.

கருத்துப் பின்புலம்

[தொகு]

உலகமயமாதல் ஆங்கிலத்தில் பரவிய "globalization" என்ற கருத்துருவாக்கத்தின் தமிழ்ப்பதம் ஆகும். தமிழில் உலகமயமாக்கம் என்ற சொல்லும் சில வேளைகளில் "globalization" க்கு ஈடாக பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனால் அச்சொற்களின் பொருள் வேறுபாடு கவனிக்கத்தக்கது. உலகமயமாதல் தானாக விரியும் ஒரு செயல்பாடு, அல்லது அதை நோக்கிய ஒரு கருத்துப்பாடு. உலகமயமாக்கம் என்பது யாரோ அதன் பின்னால் இருந்து ஆக்குவதா பொருள் தொனிக்கின்றது.

உலகமயமாதல் என்பதைப் பொருளாதாரம் தொடர்பில் பயன்படுத்தத் தொடங்கியது 1981 ஆம் ஆண்டிலேயேயாகும். தியோடோர் லெவிட் (Theodore Levitt) என்பவர் எழுதிய சந்தைகளின் உலகமயமாதல் (Globalization of Markets) என்னும் நூலில் உலகமயமாதல் என்பது பொருளாதாரம் தொடர்பில் பயன்படுத்தப்பட்டது. உலகம் தழுவிய சமூகவியல் ஆய்வுகளிலும், இது ஒரு பரந்த, அனைத்தும் தழுவிய தோற்றப்பாடாக (phenomenon) உணரப்பட்டது.

உலகமயமாதல் என்பது பல கோணங்களில் இருந்து நோக்கப்படுகின்றது:

  • வளர்ந்து வரும் நாடுகளுக்கு, அதிகரித்த வாழ்க்கைத் தரத்தையும், வளத்தையும் கொண்டுவருகின்றது என்பதும், முதலாம் உலக நாடுகளினதும், மூன்றாம் உலக நாடுகளினதும் நிதி வளத்தைப் பெருக்க உதவுகிறது என்பதும் ஒரு வகையான நோக்கு. இது உலகமயமாதலைப் பொருளியல் மற்றும் சமூக அடிப்படையில் ஒரு விரும்பத்தக்க விடயமாகக் கருதுகின்றது.
  • இன்னொரு நோக்கு, பொருளியல், சமூக மற்றும் சூழலியல் அடிப்படையில் உலகமயமாதலை எதிர்மறையான, விரும்பத்தகாத ஒரு விடயமாகக் கருதுகின்றது. இதன்படி, உலகமயமாதல், வளர்ந்து வருகின்ற சமுதாயங்களின் மனித உரிமைகளை நசுக்குகிறது என்றும், வளத்தைக் கொண்டுவருவதாகக் கூறிக்கொண்டு கொள்ளை இலாபமீட்டுவதை அனுமதிக்கிறது என்றும் சுட்டிக் காட்டப்படுகின்றது. இவை தவிரப் பண்பாட்டுப் பேரரசுவாத (cultural imperialism) நடவடிக்கைகளினூடாகப் பண்பாட்டுக் கலப்புக்கு வழி வகுப்பதும், செயற்கைத் தேவைகளை ஏற்றுமது செய்வதும், பல சிறிய சமுதாயங்கள், சூழல்கள் மற்றும் பண்பாடுகளைச் சிதைத்து விடுவதும் இதன் எதிர்மறை விளைவுகளாக எடுத்துக் காட்டப்படுகின்றன.

உலகமயமாதலும் பண்பாடும்

[தொகு]

உலகமயமாதல் பலமான மொழி, பண்பாட்டு, அடையாளங்களை முன்னிறுத்தி சிறுபான்மை இன - மொழி - பண்பாட்டு அழிவுக்கு அல்லது சிதைவுக்கு இட்டு செல்வதாக சிலர் வாதிக்கின்றனர். இக்கூற்றில் உண்மையுண்டு, எனினும் ஒரு சமூகத்தின் அடிப்படைக் கூறுகளை இழக்காமல் உலகமயமாதல் உந்தும் அல்லது தருவிக்கும் அம்சங்களையும் ஒரு சமூகம் ஏற்றுக்கொள்ள முடியும். அதாவது உலகமயமாதல் இருக்கும் ஒன்றின் அழிவில் ஏற்படமால், இருக்கும் ஒன்றோடு அல்லது மேலதிகமான அம்சங்களை அறிமுகப்படுத்தும் ஒரு உந்தலாகவும் பார்க்கலாம்.

உலகமயமாதலும் சாதியக் கட்டமைப்பும்

[தொகு]

உலகமயமாதல் பல முரண்பாடான விளைவுகளை உந்தக்கூடியது. ஒரு புறத்தில் மரபுவழி சாதிய-சமூக கட்டமைப்புக்களால் பிணைக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட சமூகங்களை, குடுமங்களை, தனிமனிதர்களை விடுவிக்ககூடிய தொழில், தொடர்பு, போக்குவரத்து, கல்வி வாய்ப்புக்களை உலமயமாதல் முன்வைக்கின்றது. அதேவேளை பொருள் முதலாளித்துவ சுரண்டலுக்கும், அடிமைத்தனத்துக்கும், சமூக-குடும்ப சிதைவுக்குமான காரணிகளையும் உலகமயமாதல் கொண்டிருக்கின்றது.

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் தாமஸ் ப்ரீட்மன் உலகமயமாதல் பற்றி The World is Flat என்ற புத்தகம் எழுதியிருக்கிறார்.

விளைவுகள்

[தொகு]

பொருளியல்

[தொகு]

1955 ஆம் ஆண்டுக்கும் 2007 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உற்பத்திப் பொருட்களினது பன்னாட்டு வணிகம் 100 மடங்குகளுக்கு மேலாக (95 பில்லியன் ஐ.அ.டாலர்களில் இருந்து 12 டிரிலியன் ஐ.அ.டாலர்கள் வரை) அதிகரித்து உள்ளது.[1]

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், விரிவடைந்த வணிகம், முதலீடு என்பவை காரணமாக ஒவ்வொரு நாளும் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான பல நாட்டு நாணய வணிகம் இடம்பெற்றது.

வணிகப் போட்டிகளுக்குத் தாக்குப் பிடித்து, உலக வணிகச் சந்தையில் நின்று நிலைப்பதற்கு நிறுவனங்கள், தமது உற்பத்திகளை மேம்படுத்த வேண்டி இருப்பதுடன், தொழில்நுட்பங்களையும் திறமையுடன் பயன்படுத்த வேண்டி உள்ளது.

அளவுக்கு மீறிய விரைவான வளர்ச்சியினால் சில வெளிப்படையான பிரச்சினைகள் இருந்தாலும், பல நாடுகளை வறுமையில் இருந்து மீட்பதற்கு உலகமயமாதல் ஒரு நேர்நிலை ஆற்றலாக விளங்குவதாக முன்னாள் ஐக்கிய நாடுகளின் உலகமயமாதல் தொடர்பான ஆலோசகரான ஜகதீசு பகவதி என்பார் குறிப்பிடுகிறார். அவருடைய கூற்றுப்படி, உலகமயமாதல், விரைவான பொருளாதார வளர்ச்சியுடன் கூடிய பொருளியல் சுழற்சியை உருவாக்குகிறது.[2]

உலகமயமாதலின் நன்மைகளும், தீய விளைவுகளும் நாடுகளிடையேயும் பிரதேசங்களிடையேயும் சமமாகப் பகிரப்படுவதில்லை.

மூளைசாலிகள் வெளியேற்றம்

[தொகு]

செல்வந்த நாடுகளில் உள்ள வாய்ப்புக்கள் வறிய நாடுகளில் உள்ள திறன் பெற்ற தொழிலாளர்களைக் கவருவதனால் மூளைசாலிகள் வெளியேற்றம் ஏற்படுகின்றது. எடுத்துக் காட்டாக, பல்வேறு வறிய நாடுகளிலிருந்து பயிற்சி பெற்ற தாதிகள் வேலைக்காக ஐக்கிய அமெரிக்காவுக்கு வருகின்றனர்.[3] இதனால், புதிய வெளிநாட்டுத் திறனாளர்களைப் பெறுவதற்கு ஆப்பிரிக்காவுக்கு மட்டும் ஆண்டு தோறும் 4.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு ஏற்படுகிறது. இது போலவே மூளைசாலிகள் வெளியேற்றத்தின் மூலம் இந்தியாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்படுகிறது.[4]

வணிகச் செயலாக்கப் புறத்திறனீட்டம்

[தொகு]

வணிகச் செயலாக்கப் புறத்திறனீட்டம் என்பது பல்வேறு வணிகச் செயற்பாடுகளுக்காக சேவைகளை வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்வதைக் குறிக்கும். இது மலிவான சேவைகளை வழங்குவதற்கு உதவினாலும், சில இடங்களின் சேவைத்துறை வேலை வாய்ப்புக்களை வேறிடத்துக்கு மாற்றிவிடுகிறது. எனினும் மலிவான தொழிலாளர் கிடைக்கக்கூடிய இந்தியா போன்ற நாடுகள் இதனால் பெரிதும் பயன் அடைகின்றன. எதிர்வரும் சில பத்தாண்டுகளுக்கு இந்தியாவின் வளர்ச்சிக்கான முதன்மை உந்து சக்தியாகத் திகழப்போவது புறத்திறனீட்டத் துறையே. இது பரவலாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி, வேலை வாய்ப்புப் பெருக்கம், வறுமை ஒழிப்பு ஆகியவற்றுக்குப் பங்களிப்புச் செய்கிறது".[5][6]

நுகர்வு

[தொகு]

தொலைக்காட்சிப் பெட்டிகள், வானொலிப் பெட்டிகள், ஈருருளிகள், புடவை வகைகள் போன்றவற்றை ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா, சப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் "ஆசியான் புலிகள்" எனப்பட்ட நாடுகளின் பொருளாதாரம் விரிவடைந்தது. அக்டோபர் 2011 ஆம் ஆண்டில் சீனாவின் ஏற்றுமதியின் பெறுமானம் 157.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. அதே ஆண்டில், சீனாவின், பொருட்களினதும் சேவைகளினதும் ஏற்றுமதி அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 39.7% ஆக இருந்தது. சீனாவுடனான வணிகத்தில் ஐக்கிய அமெரிக்காவுக்கான வணிகப் பற்றாக்குறையினால், 2001 ஆம் ஆண்டுக்கும் 2008 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவில் 2.4 மில்லியன் பணி இழப்பு ஏற்பட்டதாக பொருளாதாரக் கொள்கைகள் நிறுவனத்தின் ஆய்வு ஒன்று காட்டுகிறது. 2000க்கும் 2007க்கும் இடையில் அமெரிக்கா மொத்தம் 3.2 மில்லியன் உற்பத்தித்துறைப் பணி வாய்ப்புக்களை இழந்துள்ளது. சீனாவின் பொருளாதார வெற்றிகளினால், மேற்கு நாடுகளிலும், வளர்ந்துவரும் நாடுகளிலும் வேலை இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. சீன உற்பத்திப் பொருட்கள் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டதால், தென்னாப்பிரிக்காவில் ஏறத்தாழ 300,000நெசவாலைத் தொழிலாளர் வேலை இழந்துள்ளனர்.

போதைப்பொருள், சட்டத்துக்குப் புறம்பான பொருட்கள் வணிகம்

[தொகு]

2010 ஆம் ஆண்டில், உலக போதைப்பொருள் வணிகம், ஆண்டொன்றுக்கு 320 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் பெற்றதாக போதைப்பொருள்களுக்கும், குற்றச் செயல்களுக்குமான ஐக்கிய நாடுகள் அலுவலகம் அறிவித்துள்ளது.[7] அத்தோடு உலக அளவில் 50 மில்லியன்களுக்கு மேற்பட்டோர் ஒழுங்காக எரோயின், கொக்கெயின், செயற்கைப் போதைப்பொருள்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் மதிப்பிட்டுள்ளது.[8] சட்டத்துக்குப் புறம்பான கடத்தல் தொழிலுடன் தொடர்புடைய வணிகங்களில் போதைப்பொருள் வணிகத்துக்கு அடுத்தபடியாக உள்ளது அழியும் நிலையில் உள்ள உயிரினங்கள் தொடர்பான வணிகம் ஆகும்.[9] சில நாடுகளின் மரபுவழி மருத்துவத்தில் பல்வேறு தாவரங்கள், விலங்குகள் போன்றவற்றின் பல்வேறு பகுதிகள் பயன்படுகின்றன. இவற்றுள், அழியும் நிலையில் உள்ள விலங்குகளான கடற் குதிரைகள், காண்டாமிருகங்கள், புலிகள் போன்றவற்றின் உடற் பாகங்களும் அடங்கும். இதனால், சட்டத்துக்குப் புறம்பாக இவ்விலங்குகளை வேட்டையாடுவது, அவற்றின் பகுதிகளைக் கள்ளச் சந்தையில் விற்பது என்பது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன.[10][11]

அரசியல்

[தொகு]

அரசியல் பூகோளமயமாக்கம் அல்லது அரசியல் உலகமயமாதல் ஆனது நீண்ட காலமாக இயங்கி வரும் அரசுகளின் தேவைகளையும், முக்கியத்துவத்தினையும் குறைத்து வருகின்றது. இன்று அரசுகள் தனித்து செயல்படுவது பெரும் சவாலாக காணப்படுகின்றது. பௌதிக எல்லைகளைக் கடந்து அரசுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களின் ஆதிக்கங்கள் வலுப்பெற்று வருகின்றன. இதனால் பொருளாதார இராணுவ மற்றும் இதர உதவிகளுக்காக நாடுகள் ஒன்றோடு ஒன்று தங்கியிருப்பதுடன் அவற்றின் கூட்டிணைப்பு பிராந்திய மற்றும் உலகளாவிய அமைப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. உதாரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தினை[12] கூறலாம். இவற்றில் அங்கம் வகிக்கும் நாடுகள் அமைப்புகளின் சட்டங்கள் மற்றும் கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றன. இதனைத் தவிர அரச சார்பற்ற நிறுவனங்கள் நாடுகளின் எல்லைகளைக் கடந்து சட்டங்கள் மற்றும் கொள்கைகளில் அழுத்தங்களை பிரயோகிப்பதன் ஊடாக அரசியல் உலகமயமாதலுக்கு உதவி புரிகின்றன. மனிதாபிமான உதவிகள், சூழற்சார் கொள்கைகள் என்பவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். நாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய நிறுவனங்களான ஐரோப்பிய ஒன்றியம், உலக வணிக அமைப்பு, ஜி8, உலகக் குற்றவியல் நீதிமன்றம் போன்ற அமைப்புக்கள் நாடுகளின் செயற்பாடுகள் சிலவற்றைப் பதிலீடு செய்கின்றன. ஐக்கிய அமெரிக்காவின் வலிமை ஒப்பீட்டளவில் குறைந்ததற்கான காரணம் உலகமயமாதலும் அதன் வழியான வணிகப் பற்றாக்குறையுமே என்பது சில ஆய்வாளர்களுடைய கருத்து. இது ஆசியாவை நோக்கிய உலக அதிகாரப் பெயர்ச்சிக்கு வழி வகுத்துள்ளதாகவும் கருத்து உண்டு. குறிப்பாகச் சீனா பெரிய சந்தை வளர்ச்சியைப் பெற்றுள்ளது. 2011 ஆம் ஆண்டின் நிலவரப்படி, 2025 ஆம் ஆண்டில் அமெரிக்காவை முந்தும் நிலையில் சீனா உள்ளது.

பண்பாடு

[தொகு]

மாண்டரின் மொழியே உலகின் மிகப் பெரிய மொழி. 845 மில்லியன் மக்கள் இதைப் பேசுகின்றனர். இதற்கு அடுத்த நிலையில் 329 மில்லியன் மக்களுடன் எசுப்பானிய மொழி உள்ளது. மூன்றாவது இடத்தில் ஆங்கிலம் உள்ளது. ஆனாலும் உலகமயமாதலின் மொழியாக இருப்பது ஆங்கிலமே. இதனால், உலக அளவில் ஆங்கிலத்தின் முக்கியத்துவம் அதிகமாக உள்ளது.

  • உலகின் 35% கடிதங்கள், தந்திகள் போன்றவற்றின் மொழி ஆங்கிலமாக உள்ளது.
  • உலகின் 40% வானொலி நிகழ்ச்சிகள் ஆங்கிலத்திலேயே நடைபெறுகின்றன.
  • ஏறத்தாள 3,5 பில்லியன் மக்கள் ஆங்கிலத்தில் ஓரளவு பரிச்சயம் கொண்டவர்கள்.
  • இணையத்தில் ஆங்கிலமே முதன்மை மொழியாகத் திகழ்கின்றது.

பண்பாட்டு உலகமயமாதல், பண்பாடுகளுக்கு இடையேயான தொடர்புகளை அதிகரித்து இருக்கும் அதே வேளை, சமுதாயங்களின் தனித்துவங்களைக் குறைக்கிறது. உலகமயமாதல், தனிமனிதர்களை அவர்களது மரபுகளில் இருந்து தனிமைப்படுத்துகிறது என்றாலும், மேற்படி விடயத்தில் நவீனத்துவத்தின் தாக்கத்தோடு ஒப்பிடும்போது உலகமயமாதலின் தாக்கம் மிதமானதே என்றும் சிலர் சுட்டிக் காட்டுகின்றனர்.

உலகமயமாதல் மூலம், பொழுதுபோக்கு வாய்ப்புக்களும் விரிவடைந்துள்ளன. குறிப்பாக இணையம், செய்மதித் தொலைக்காட்சி போன்றவற்றின் ஊடாக இது நடைபெறுகிறது.

எந்த ஒரு நேரத்திலும் 500,000 பேர் வானூர்தியில் பறந்துகொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் பன்னாட்டுச் சுற்றுலாத்துறை 919 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. இது 2009 ஆம் ஆண்டைவிட 6.5% கூடுதலானது.

2008 ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும், சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் உட்பட 200 மில்லியன் புலம் பெயர்ந்தோர் இருப்பதாக, புலப்பெயர்வுக்கான பன்னாட்டு அமைப்பு கண்டறிந்துள்ளது. இவர்கள் வளர்ந்துவரும் நாடுகளுக்கு அனுப்பும் பணம் அக்காலப் பகுதியில் 328 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.

குறிப்புகள்

[தொகு]
  1. "Globalisation shakes the world". பிபிசி செய்திகள். 21 சனவரி 2007.
  2. Bhagwati, Jagdish (2004). In Defense of Globalization. Oxford, New York: Oxford University Press.
  3. "Culture and Globalization: Center for Global Studies at the University of Illinois". Archived from the original on 2013-02-14. பார்க்கப்பட்ட நாள் 2012-04-14.
  4. "Students’ exodus costs India forex outflow of $10 bn: Assocham பரணிடப்பட்டது 2012-01-18 at the வந்தவழி இயந்திரம்". Thaindian News. 26 January 2009.
  5. Kuruvilla; Ranganathan (October 2008). "ECONOMIC DEVELOPMENT STRATEGIES AND MACRO- AND MICRO-LEVEL HUMAN RESOURCE POLICIES: THE CASE OF INDIA'S "OUTSOURCING" INDUSTRY". Industrial & Labor Relations Review 62 (1): 39–72. https://archive.org/details/sim_industrial-labor-relations-review_2008-10_62_1/page/39. 
  6. "Outsourcing to Africa: The world economy calls | The Economist". 16 April 2011. பார்க்கப்பட்ட நாள் 16 April 2011.
  7. "UN.org". United Nations. பார்க்கப்பட்ட நாள் 31 July 2010.
  8. "Drug Trade". BBC News.
  9. "Will traditional Chinese medicine mean the end of the wild tiger?". San Francisco Chronicle. 11 November 2007.
  10. "India says Chinese medicine fuels tiger poaching". Reuters. 17 September 2009.
  11. "Rhino rescue plan decimates Asian antelopes". New Scientist. 12 February 2003.
  12. எம், அலிகான் (2021). "பூகோளமயமாக்கல்". புவியியல் சஞ்சிகை 1: 16. 

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  • John Baylis and Steave Smith. (2001). The Globalization of World Politics. New York: Oxford press.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகமயமாதல்&oldid=3780036" இலிருந்து மீள்விக்கப்பட்டது