எசு. எம். கமால்
சேக்-உசைன் முகமது கமால் என்னும் எசு. எம். கமால் (1928 அக்டோபர் 15 – 2007 மே 31) வரலாற்று ஆய்வாளர். நூலாசிரியர், பதிப்பாளர், இதழாசிரியர், வானொலி வடிவ எழுத்தாளர், சமுதாயத் தொண்டர்.[1] பல வரலாற்றுக் கருத்தரங்குகளில் இலக்கியம், வரலாறு, கல்வெட்டு, செப்பேடு, நாணவியல் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியவர்.[2] இராமநாதபுரம், சிவகங்கைப் பகுதியில் நடைபெற்ற விடுதலைப் போர்களை ஆவணப்படுத்தியவர். வரலாறுப் பேரவைகள் பலவற்றில் உறுப்ப்பினராக இருந்தவர். தான் ஆற்றிய வரலாற்றுப் பணிக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.
பிறப்பு
[தொகு]முகமது கமால் இராமநாதபுரம் நகரில் வாழ்ந்த சேக் உசைன் (ஷேக்ஹூசன்) – காதர் அம்மாள் என்னும் இணையருக்கு மகனாக 1928 அக்டோபர் 15 ஆம் நாள் பிறந்தார்.[3]
கல்வி
[தொகு]வெவ்வேறு கல்வி நிறுவனங்களில் பயின்று கலை இளவர் (Bachelor of Arts) பட்டம் பெற்றார்.[3]
பணி
[தொகு]தமிழ்நாட்டு அரசின் வருவாய்த் துறையில் நாற்பதாண்டுகள் பணியாற்றினார்.[1] எழுத்தராகப் பணியில் இணைந்து வட்டாட்சியர் நிலைவரை உயர்ந்து ஓய்வு பெற்றார்.
குடும்பம்
[தொகு]கமால், நூர்சகான் என்பவரை மணந்தார். இவர்களுக்கு சர்மிளா என்னும் மகளும் இரு மகன்களும் உள்ளனர்.[4]
எழுதிய நூல்கள்
[தொகு]முகமது கமால் பின்வரும் நூல்களை எழுதியிருக்கிறார்
வ. எண் | ஆண்டு | நூலட்டை | நூலின் பெயர் | குறிப்பு |
01 | 1984 | இராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக் குறிப்புகள் | இணை ஆசிரிய நா. முகம்மது செரீபு | |
02 | 1987 | விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் | 1989ஆம் ஆண்டில் தமிழக அரசின் பரிசும் பாரட்டும் பெற்றது. | |
03 | 1987 | மாவீரர் மருது பாண்டியர் | 1991ஆம் ஆண்டில் தமிழக அரசின் பரிசும் பாரட்டும் பெற்றது. | |
04 | 1987 | வள்ளல் சீதக்காதி திருமணவாழ்த்து | ||
05 | 1990 | முஸ்லீம்களும் தமிழகமும் | 1988 ஆம் ஆண்டில் சென்னை சீதக்காதி அறக்கட்டளை பரிசு பெற்றது. | |
06 | 1991 | அலிபாத்துஷா காப்பியம் | ||
07 | 1992 | மன்னர் பாஸ்கர சேதுபதி | ||
08 | 1994 | சேதுபதி மன்னர் செப்பேடுகள் | 1994 ஆம் ஆண்டில் தமிழக அரசின் பரிசும் பாரட்டும் பெற்றது. | |
09 | 1996 | சேதுபதியின் காதலி | 1996 ஆம் ஆண்டில் தமிழக அரசின் பரிசும் பாரட்டும் பெற்றது. நெடுங்கதை | |
10 | 1997 | சீர்மிகு சிவகங்கைச் சீமை | ||
11 | 1998 | சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் | நெடுங்கதை | |
12 | 1999 | திறமையின் திரு உருவம் ராஜா தினகர் | ||
13 | 2000 | செந்தமிழ் வள்ளல் சீதக்காதி | ||
14 | 2001 | மறவர் சீமை மாவீரன் மயிலப்பன் | ||
15 | 2002 | சேதுபதி மன்னர் கல்வெட்டுக்கள் | ||
16 | 2003 | சேதுபதி மன்னர் வரலாறு | ||
17 | 2004 | இராமர் செய்த கோயில் | ||
18 | 2005 | நபிகள் நாயகம் வழியில் |
இவை தவிர 7 நூல்கள் அச்சேறாமல், கையெழுத்துப்படிகளாக, இருக்கின்றன.
இந்நூல்கள் அனைத்தும் 2010 ஆம் ஆண்டில் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
இதழாசிரியர்
[தொகு]கமால், தமிழ் அருவி என்னும் இசுலாமிய இலக்கிய இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். இவ்விதழ் இருதிங்களுக்கு ஒரு முறை வெளிவந்தது. இதன் முதல் இதழ் நவம்பர் 94 ஆம் ஆண்டில் வெளிவந்தது.[5]
தொடர்புடைய அமைப்புகள்
[தொகு]வரலாற்று ஆய்வாளரான கமால் பின்வரும் அமைப்புகளில் வானாள் உறுப்பினராக இருந்தார். .[1]
- இராமநாதபுரம் தமிழ்ச் சங்கம். (நிறுவுநர்)
- தென்னிந்திய வரலாற்றுப் பேரவை, வேலூர்.
- தென்னிந்திய வரலாற்றுக் காங்கிரசு
- தமிழ்நாடு வரலாற்றுக் காங்கிரசு, சென்னை.
- அனைத்து இந்திய ஆவணக் காப்பாளர் இயக்கம், புதுதில்லி.
- ஊர்ப்பெயர் ஆய்வுக் கழகம், திருவனந்தபுரம்.
- தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர்.
- மதுரை வட்டார வரலாற்று ஆவணக் குழு
- மதுரைத் தமிழ்ச் சங்கம்
விருதுகள்
[தொகு]கமால் வரலாற்று இலக்கியப் பணியைப் பாராட்டி பல்வேறு அமைப்புகள் பின்வரும் விருதுகளை வழங்கி உள்ளன:[4],[3]
- இமாம் சதக்கத்துல்லா அப்பா விருது
- தமிழ்ப்பணிச் செம்மல் விருது
- சேதுநாட்டு வரலாற்றுச் செம்மல் விருது
- பாஸ்கர சேதுபதி விருது
- சேவா ரத்னா விருது
- ராஜா தினகர் விருது
- தமிழ்மாமணி விருது
- தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க விருது
- வள்ளல் சீதக்காதி விருது
- பசும்பொன் விருது
- அமெரிக்கா தக்சான் பல்கலைக் கழகத்தின் முனைவர் பட்டம்
மறைவு
[தொகு]கிளாக்கோமா என்ற கண் நீரழுத்த நோயால் கமால் 2002 ஆம் ஆண்டில் தன்னிரு கண்களின் பார்வையையும் இழந்தார். அதன் பின்னரும் உதவியாளர்களின் உதவியோடு ஆறு நூல்களை எழுதினார். 2007 மே 31ஆம் நாள் இராமநாதபுரத்தில் காலமானார்.[4]
சான்றடைவு
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 எஸ். எம். கமால், சீர்மிகு சிவகங்கைச் சீமை, பசும்பொன் மாவட்ட கலை இலக்கிய வரலாற்று ஆய்வு மையம் – சிவகங்கை, மு. பதி. பிப்ரவரி 1997, பக்.v ,
- ↑ எஸ். எம். கமால், மாவீரர் மருதுபாண்டியர், ஷர்மிளா பதிப்பகம் – இராமநாதபுரம், மு.பதி. அக்டோபர் 1989, பின்னட்டை
- ↑ 3.0 3.1 3.2 எஸ். எம். கமால், மறவர்சீமை மாவீரன் மயிலப்பன், மு.பதி 2001, சர்மிளா பதிப்பகம் - இராமநாதபுரம், பின்னட்டை
- ↑ 4.0 4.1 4.2 எஸ்.எம்.கமாலின் நூல்கள் நாட்டுடைமையாக்கம்: தமிழக அரசுக்கு தமிழ்ச் சங்கம் நன்றி
- ↑ "நாள் ஒரு நூல்". Archived from the original on 2012-07-19. பார்க்கப்பட்ட நாள் 2013-05-15.