உள்ளடக்கத்துக்குச் செல்

சிட்னி முருகன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிட்னி முருகன் கோயில்
பெயர்
பெயர்:சிட்னி முருகன் கோயில்
அமைவிடம்
நாடு:ஆஸ்திரேலியா
மாநிலம்:நியூ சவுத் வேல்ஸ்
அமைவு:மேய்ஸ் ஹில், சிட்னி
கோயில் தகவல்கள்
மூலவர்:முருகன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்:ஏப்ரல் 14, 1995
இணையதளம்:sydneymurugan.org

சிட்னி முருகன் கோயில் (Sydney Murugan Temple) அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகர் சிட்னி நகரிலிருந்து 25கிமீ மேற்காக உள்ள மேய்சு ஹில் என்ற புறநகர்ப் பகுதியில் அமைந்திருக்கிறது. மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள முருகனின் திருவுருவம் மகாபலிபுரத்து சிற்பக்கலை நிபுணரால் ஆகம நெறிமுறைக்கு அமைய நுட்பமாகச் செதுக்கப்பட்டது.

வரலாறு

[தொகு]

சிட்னியில் முதன்முதலில் முருக வழிபாட்டைத் தொடங்கியவர் திரு சி. தணிகைஸ்கந்தகுமார். 1983ஆம் ஆண்டு முருகன் சிலை ஒன்றை யாழ்ப்பாணத்தில் இருந்து வரவழைத்து தமது இல்லத்திலும் பின்னர் ஸ்ட்ரத்பீல்ட் மகளிர் உயர்நிலைப் பாடசாலையிலும் வழிபாட்டை நடத்தினார். 1985ஆம் ஆண்டு "சிட்னி சைவமன்றம்" ஆர். வடிவேலு என்பவரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. 1990இல் வீதிப் போக்குவரத்து அதிகரசபையிடம் இருந்து மாய்சு ஹில் (Mays Hill)[1] இல் ஒரு காணியைச் சைவமன்றம் வாங்கியது. 1994 ஒக்ரோபர் 9ஆம் நாள் கோயிலுக்கான அத்திவாரக்கல் நாட்டப்பட்டது. முதலில் தமிழ்க் கலாச்சார மண்டபம் கட்டப்பட்டு 1995 ஏப்ரல் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை கலாச்சார மண்டபத்தில் சித்தி விநாயகர், சிதம்பரேஸ்வரர், சிவகாமசுந்தரி ஆகிய உற்சவமூர்த்திகளுடன் முருகன் சிலை ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டது. 1997இல் கோயிலின் கட்டிட வேலைகள் ஆரம்பமாகி 1999 யூன் 17ம் திகதி குடமுழுக்கு நடைபெற்றது.

கோயிலின் அமைப்பு

[தொகு]

ஐந்து கருவறைகளைக் கொண்டது சிட்னி முருகன் ஆலயம். வலது பக்கம் விநாயகரும் இடது பக்கத்தில் வள்ளி தெய்வானை சமேதரராக முருகனும் இடையில் உள்ள மூன்று கருவறைகளில் வலப்பக்கத்தில் சிவலிங்கமும் இடப்பக்கத்தில் சிவகாமசுந்தரியும் நடுவண் கருவறையில் முருகனும் எழுந்தருளியுள்ளனர்.

நவக்கிரகம், வைரவர், சண்டேஸ்வரர் ஆகியோருக்கு தனித்தனியே சந்நிதிகள் உண்டு. அலங்காரத்தூண்களில் ஆறு படைவீடுகள், மற்றும் கதிர்காமம், செல்வச்சந்நிதி, வெருகலம்பதி, நல்லூர் ஆகிய திருத்தலங்களில் கோயில் கொண்டுள்ள முருகனின் திருவுருவங்கள் கற்பனைத் திருவுருவங்களாக இடம்பெற்றுள்ளன.

மகோற்சவம்

[தொகு]

சிட்னி முருகன் கோயிலில் மகோற்சவம் ஆண்டு தோறும் கொடியேற்றத்துடன் தொடங்கி ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவும் பங்குனி உத்தரத்தன்று தீர்த்தத்துடனும் பதினோராம் நாள் பூங்காவனம் திருக்கல்யாண விழாவுடன் நிறைவடையும்.

இளைஞர்களின் பங்களிப்பு

[தொகு]

சிட்னி முருகன் கோயில் திருப்பணிகளுக்கு இந்து இளைஞர்கள் மெரும் பங்களிப்பு செய்து வருகிறார்கள். கோயில் துப்பரவாக்கல் முதல் வாகனம் காவுதல், தேர் இழுத்தல், நந்தவனம் பராமரித்தல், கூட்டு வழிபாட்டில் கலந்து கொள்ளுதல் போன்ற பல வழிகளில் தமது பங்களிப்பினை ஆற்றி வருகிறார்கள்.

குறிப்புகள்

[தொகு]
  1. Mays Hill வைகாசிக் குன்று என சிட்னி வாழ் தமிழர்களால் அதிகாரபூர்வமற்ற வகையில் அழைக்கப்படுகிறது

உசாத்துணை

[தொகு]
  • கந்தையா, ஆ., ஆஸ்திரேலியாவில் இந்துக் கோயில்கள், சிட்னி

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்னி_முருகன்_கோயில்&oldid=3825212" இலிருந்து மீள்விக்கப்பட்டது