சூர்யகுமாரி
தங்குதூரி சூர்யகுமாரி | |
---|---|
பிறப்பு | ராஜமன்றி, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய ஆந்திரப் பிரதேசம், இந்தியா) | 13 நவம்பர் 1925
இறப்பு | 25 ஏப்ரல் 2005 இலண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் | (அகவை 79)
தேசியம் | இந்தியா |
மற்ற பெயர்கள் | தங்குதூரி சூர்யகுமாரி |
பணி | வடிவழகி, பாடகி, நடிகை, நடனக் கலைஞர் |
வாழ்க்கைத் துணை | எரால்டு எல்வின்[1] |
தங்குதூரி சூர்யகுமாரி ( Tanguturi Suryakumari) (13 நவம்பர் 1925 - 25 ஏப்ரல் 2005), தனது திருமணப் பெயரான சூர்யகுமாரி எல்வின் என்றும் அறியப்படும் இவர் ஓர் இந்தியப் பாடகியும், நடிகையும் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்த நடனக் கலைஞரும் ஆவார். ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தெலுங்குத் தாய் வாழ்த்தான " மா தெலுங்கு தல்லிகி " என்ற பாடலைப் பாடியுள்ளார்.[2] மிஸ் மெட்ராஸ் 1952 போட்டியில் வெற்றி பெற்றவர். மிஸ் இந்தியா 1952 போட்டியில் இரண்டாம் இடம் வந்தார்.[1] ஆந்திர மாநிலத்தின் முதல் முதலமைச்சராகவும் முன்பு சென்னையின் முதலமைச்சராகவும் பணியாற்றிய செயல்பாட்டாளரும் அரசியல்வாதியுமான த. பிரகாசம் அவர்களின் மருமகள் ஆவார்.
ஒரு நடிகையாக, 1961 இல் இரவீந்திரநாத் தாகூரின் தி கிங் ஆஃப் தி டார்க் சேம்பர் என்ற நாடகத்தில் ராணி சுதர்சனாவாக நடித்ததற்காக, நியூயார்க் நாடக எழுத்தாளர்களின் அதிகாரப்பூர்வ அமைப்பான அவுட்டர் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் மூலம் வழங்கும் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.[2]
தொழில்
[தொகு]சூர்யகுமாரி 12 வயதில் திரைப்பட நட்சத்திரமாக அறிமுகமானார்.[3] இவரது பாடும் திறமைகளுக்கு இடமளிக்கும் வகையில் விப்ரநாராயணா (1937) திரைப்படத்தில் ஒரு சிறப்புப் பகுதி எழுதப்பட்டது.
சூர்யகுமாரியின் அடுத்த படம் அத்ருஷ்டம் (1939) குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றது.[4][5] கடகம் (1948) மற்றும் சம்சார நௌகா (1949) ஆகியவை இவரது பிற படங்களில் அடங்கும். அதிகம் கவனிக்கப்ப்படாத வில்லியம் சேக்சுபியரின் சிம்பலின் என்ற நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு கடகம் என்ற படம் எடுக்கப்பட்டது. அதன் தமிழ் பதிப்பில் சூர்யகுமாரி நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து சுமார் 25 படங்களில் நடித்தார். இதில் தேவதா மற்றும் ரைத்து பித்தா அகியவை குறிப்பிடத்தக்கவை. எச். வி. பாபுவின் கிருஷ்ண பிரேமா படத்தில், நாரதராக சூர்யகுமாரி நடித்தார். மேலும் நாரதராக ஒரு பெண் நடித்தது தெலுங்குத் திரையுல வரலாற்றில் முதல் முறையாகும். இந்தப் படத்தில், முதன்முறையாக, சூர்ய குமாரியின் பாடும் திறமையை நன்கு பயன்படுத்தப்பட்டது. இவரது நடிப்பு பல விருதுகளைப் பெற்றது. பாலிவுட் திரைப்படங்களான வாடன் (1954) மற்றும் திலிப் குமாருடன் சேர்ந்து ஊரான் கடோலா (1955) ஆகிய படங்களிலும் தோன்றினார். கடோலா படத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் விருதுகளில் சிறந்த துணை நடிகை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
பாடகராக
[தொகு]இவரது திரைப்பட வாழ்க்கையைத் தவிர, தங்குதூரி சூர்யகுமாரி கிராமபோன் ஒலிப்பதிவுகளாகவும் பின்னர் இசைத் தட்டுகளாகவும் வெளியிடப்பட்ட இவரது தனிப்பட்ட பாடல்களுக்காகவும் நன்கு அறியப்பட்டவர். பாடல்கள் மெல்லிசையாகவும், ஈர்க்கக்கூடிய வரிகளுடனும் இருந்தன. இவர் சில தேசபக்திப் பாடல்களையும் பாடினார் அவற்றில் சில காந்தியைப் புகழ்ந்து பாடியிருந்தார். இவர் பாடிய ஏராளமான பாடல்களில் "மா தெலுங்கு தல்லிகி", "மல்லேபூதண்டாலு", "ஓ மகாத்மா", "சதபத்ர சுந்தரி", "மாமிடிசெட்டுனு" போன்றவை குறிப்பிடத்தக்கதவை.[6] தேசபக்தியுள்ள தமிழ் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான அ. க. செட்டியார் தயாரித்த மகாத்மா காந்தியைப் பற்றிய நீண்ட ஆவணப் படத்திலும் சூர்யகுமாரி பாடியுள்ளார்.
மேற்கத்திய பயணம்
[தொகு]மொத்தத்தில், சூர்யா 1940கள் மற்றும் 1950களில் சுமார் 25 இந்தியத் திரைப்படங்களில் தோன்றினார். தெலுங்கு, சமசுகிருதம், தமிழ், குஜராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடி நடித்தார்.
ரைத்து பித்தா (1939), பாக்யலட்சுமி (1943), கிருஷ்ண பிரேமா (1943), மரதாலு பெல்லி (1952) மற்றும் இந்தி படங்களான வாடன் (1954), ஊரான் கடோலா (1955) போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இதில் ஊரான் கடோலா தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வானரதம் என்ற பெயரில் 1 நவம்பர் 1956 அன்று வெளியிடப்பட்டது. படத்தின் பாடல் வரிகளை கம்பதாசன் எழுத எம். பி. சீனிவாசன் இசையமைத்திருந்தார்.[7]
1950 களின் நடுப்பகுதியில், அமெரிக்காவின் மோஷன் பிக்சர் அசோசியேஷன் சார்பில் ஹாலிவுட்டுக்கு அழைக்கப்பட்ட இந்தியத் திரைப்படத் துறையின் பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினராக இவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு தனது முதல் வருகையை மேற்கொண்டார்
1959 இல், இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கற்பிக்க நியூயார்க் சென்றார். மேலும் மேற்கத்திய பாரம்பரியம் மற்றும் பிரபலமான நடன வடிவங்களைப் படிப்பதன் மூலம் தனது திறமைகளை மேம்படுத்தினார். அங்கு இந்தியத் தூதருடன் தொலைக்காட்சியில் தோன்றி இந்தியப் பாடல்களைப் பாடினார். அமெரிக்க நாடக அரங்கில் அறிமுகமான இவர், பிப்ரவரி 1961 இல் ஜான் ஹஸ் பிளேஹவுஸ் நாடக அரங்கில் இரவீந்திரநாத் தாகூரின் நாடகமான தி கிங் ஆஃப் தி டார்க் சேம்பரில் ராணி சுதர்சனாவாக நடித்தார்.[8] நடிப்பிற்காக, இவருக்கு சிறந்த நடிகைக்கான ஆஃப்-பிராட்வே விருது விமர்சகர்கள் விருது வழங்கப்பட்டது. ஆல்பிரட் ஹிட்ச்காக்குடன் சூர்யகுமாரிக்கு அறிமுகம் இருந்தது. பின்னர் தாகூரின் சித்ரா என்ற நடன நாடகத்தில் இளவரசி சித்ராவாகவும் நடித்தார். மேலும் ஆல்பிரட் ஹிட்ச்காக்கிற்காக இந்தியக் கதைகளை ஆய்வு செய்தார்.
இலண்டனுக்குப் பயணம்
[தொகு]1965ல் சூர்யகுமாரி இலண்டனுக்குப் பயணம் செய்தார். ஆர்ட்ஸ் தியேட்டரில் நடந்த கைன்ட்லி மங்கிஸ் என்ற நாடகத்தில் இந்து தெய்வமான காளியாக நடித்தார். தனது கணவர் எரோல்ட் எல்வினுடன் சேர்ந்து கென்சிங்டன் என்னுமிடத்தில் கலைஞர்களைப் பயிற்றுவிப்பதற்கும் தயாரிப்புகளை மேடை ஏற்றுவதற்கும் ஒரு திட்டமான இந்திய நிகழ்த்துக் கலை எனும் பள்ளியை நிறுவினார்.[9]
இறப்பு
[தொகு]சூர்யகுமாரி 25 ஏப்ரல் 2005 அன்று தனது 79வது வயதில் காலமானார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Srihari, Gudipoodi (4 July 2008). "Twinkle toes and a magical voice". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/Twinkle-toes-and-a-magical-voice/article15399136.ece. பார்த்த நாள்: 17 March 2018.
- ↑ 2.0 2.1 Harpe, Bill (18 May 2005). "Obituaries: Surya Kumari". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 2014-08-18.
- ↑ Rajadhyaksha, Ashish; Willemen, Paul (2014). Encyclopedia of Indian Cinema. Routledge. p. 225. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781135943189. பார்க்கப்பட்ட நாள் 17 March 2018.
- ↑ "Biography of Tanguturi Suryakumari". Archived from the original on 2023-04-05. பார்க்கப்பட்ட நாள் 2024-03-07.
- ↑ .
- ↑ https://www.amazon.com/Golden-Hour-Basic-Songs-Tanguturi-Suryakumari
- ↑ Film News Anandan (23 அக்டோபர் 2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [History of Landmark Tamil Films] (in Tamil). Chennai: Sivakami Publishers. Archived from the original on 27 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 27 மே 2017.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Glover, William (13 February 1961). "Spirited Play From India Has Charm". Red Bank Register. p. 5.
- ↑ Newley, Patrick (1 June 2005). "Final curtain". thestage.co.uk. Archived from the original on 17 March 2018. பார்க்கப்பட்ட நாள் 19 March 2018.
மேலும் படிக்க
[தொகு]- Krishnamurti, G. (2007). Suryakumari - Elvin: A Memorial Volume. Videsandhra Publications.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சூர்யகுமாரி
- யூடியூபில் Ranga Nee Enaikaaru - A song sung by Suryakumari in the Tamil version of Vipra Narayana (1937). She was only 12 at that time.