லால் பங்களா
லால் பங்களா (Lal Bangla) இந்தியாவின் தில்லி மாநகரில் அமைந்துள்ள முகலாய ஏகாதிபத்தியத்தைச் சேர்ந்த இரண்டு கல்லறை மாடங்களாகும். இந்நினைவுச் சின்னத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது [1].
மீள்பார்வை
[தொகு]லால் பங்களாவில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் மணற்கற்களால் கட்டப்பட்ட இரண்டு சமாதிகள் உள்ளன. அவற்றுள் ஒரு சமாதியில் இரண்டு சவக்குழிகள் உள்ளன. அவையிரண்டும் 1759-1806 காலப்பகுதியைச் சேர்ந்த இரண்டாம் சா ஆலமின் தாயார் இலால் கன்வார் மற்றும் அவருடைய மகள் பேகம் யான் ஆகியோருடைய சவக்குழிகள் என்று நம்பப்படுகிறது.
இரண்டு கல்லறை மாடங்களும் மூலைவிட்டங்களில் சதுர அறைகளும் அவற்றிற்கிடையில் நீள்சதுர அரங்குகளையும் கொண்டுள்ளன. மூலைகளில் அறைகளைக் கொண்ட சிவப்பு மணற்கற்களால் ஆன நடைமேடையின் மேல் இக்கல்லறை மாடங்கள் நிற்கின்றன. கல்லறையின் மேலுள்ள குவிமாடம் முகலாயர் பாணியில் கட்டப்பட்டுள்ளது. குவிமாடத்தின் உச்சியில் கோபுர முகடு அமைந்துள்ளது. சிவப்பு மற்றும் மஞ்சள் மணற்கற்களைப் பயன்படுத்தியுள்ள கட்டிடக்கலைச் சிறப்புகள், புதுதில்லியில் உள்ள சிறப்பு மிக்க சப்தார்சங் சமாதியின் கட்டிடக்கலையுடன் ஒத்திருப்பதாக அறியப்படுகிறது.
1806-1837 காலத்தைச் சேர்ந்த பேரரசர் இரண்டாம் அக்பர் சா குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் மூன்று கல்லறைகள் இதற்குப் பக்கத்தில் அமைந்துள்ளன. இக்கட்டிடங்கள் யாவும் தில்லி கால்ப் கழகத்தின் வளாகத்தில் உள்ளன. மேலும் இவ்வளாகத்திற்குள் மிகப்பழமை வாய்ந்த சையத் அபித் கல்லறையும் இடம்பெற்றுள்ளது. சாச்சகானின் முன்னணி படையினரில், சையத் அபித்தும் ஒருவரென தில்லியில் உள்ள சர் சையது அகமது கானின் நினைவுச் சின்னங்கள் தெரிவிக்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]புற இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் லால் பங்களா தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Delhi 2000 | Lal Bangla பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்