விற்பனை முனை
சந்தைப்படுத்தல் |
---|
Key concepts |
Promotional contents |
Promotional media |
விற்பனை முனை (Point of sale, சுருங்க POS) அல்லது வெளிச்செல்முகப்பு, (checkout) அல்லது கணினிமயமாக்கப்பட்ட பிறகு மின்னணு விற்பனை முனை (electronic point of sale, சுருங்க EPOS), (பேச்சு வழக்கு:கல்லா) என்றெல்லாம் குறிப்பிடப்படுவது சில்லறை வணிகக் கடையொன்றில் வாங்கிய பொருளுக்கான அல்லது நுகர்ந்த சேவைக்கான பணத்தைக் கட்டுமிடம் ஆகும். பணம் கட்டியபின் பொருளைக் கடைக்கு வெளியே எடுத்துச் செல்லலாம். இங்கு நுகர்வோர் தரவேண்டிய பணத்தை கணக்கிடுதலும் விருப்பத்தேர்வுகளின்படி பணம் கட்டுதலும் நிகழும். பெற்றுக்கொண்ட பணத்திற்கான இரசீதும் இங்கு வழங்கப்படும்.
உரிமையாளரே கடையின் விற்பனை முனை (கல்லா)வில் அமரும்போது கணக்கிடுதலும் பணம் பெறுவதும் மனிதமுயற்சியாக நடந்தது. ஆனால் வணிகம் வளர்ச்சியடைந்து பணியாளர்களை கல்லாவில் அமர்த்த நேரிட்டபோது கணினிமய பணவரவுப்பதிவேடுகள் பயன்படுத்தப்பட்டன. முதல் நுண்செயலியால் கட்டுப்படுத்தப்பட்ட பணவரவுப் பதிவேட்டு கணினியை 1974ஆம் ஆண்டில் வில்லியம் புரொபெக் நிறுவனம் மக்டொனால்ட்ஸ் உணவகங்களுக்காக உருவாக்கியது.[1]
பல்வேறு வணிக நிறுவனங்கள் கட்டமைக்கும் விற்பனை முனையில் அவர்களது தேவைகளுக்கேற்ப ஏதுவாக்கப்பட்ட வன்பொருள்களும் மென்பொருள்களும் பயன்படுத்தப்படுகின்றன. எடைபோடும் கருவிகள், பட்டைக்குறி வருடிகள், மின்னணு பணவரவுப் பதிவேடுகள், மின்வழி நிதிமாற்று விற்பனை முனைக் கருவிகள், தொடுதிரைக் கணினிகள், மற்றும் பல வன்பொருள், மென்பொருள் கருவிகள் கிடைக்கின்றன. காட்டாக, மளிகைக் கடையிலும் இனிப்புக் கடையிலும் எடைபோடும் கருவிகள் பயன்படுத்தப்பட, உணவகங்களில் பயன்படுத்திய சேவைக்கு தகுந்தவாறு கணக்கிட சிறப்பு மென்பொருள் பயன்படுத்தப்படலாம்.
தற்காலத்தில் விற்பனை முனை (வணிகர்களின் பார்வையில் வாங்கு முனை) சிலநேரங்களில் சேவை முனை எனவும் அழைக்கப்படுகின்றது; ஏனெனில் இங்கு விற்பனை மட்டும் நடக்காது திரும்பப் பெறுதலும் நுகர்வோர் ஆணையைப் பெறுவதும் கூட நிகழ்கின்றன. மேலும் மேம்பட்ட விற்பனை முனை மென்பொருட்களில் இருப்பிலுள்ள பொருட்களின் மேலாண்மை, நுகர்வோர் மேலாண்மை, கிடங்கு மேலாண்மை போன்ற சிறப்புக் கூறுகளும் ஒருங்கிணைக்கப்படுகின்றன. தற்கால விற்பனை முனை அமைப்புகளுக்கு முன்னதாக இந்த செயற்பாடுகள் தனித்தனியாகவும் மனித முயற்சியாகவும் நடந்தன; மேலும் தரவுகளை கணினியில் தட்டச்சிடும்போது பிழைகள் ஏற்படும் வாய்ப்புகளும் எழுந்தன.